October 28, 2012

ஒரு ஈழத்தின் பெண்




என் வானின் மதி கூட
நெருப்பாக சுட
என் தோட்ட மலர் கூட
வாசங்கள் கெட
யான் வளர்த்த பசு
காம்பில் விடமாக வர
தேன் கலந்த கனியெல்லாம்
கைபட்டால் கெட


ஊன் கொண்ட
உயிர் கூட சுமையாக பட
யான் கண்ட உறவெல்லாம்
பகையாக வர
யாழ் இசையும் எனை
கண்டு அழுகின்றது
தோள் சாயிந்து அழ
நெஞ்சம் விழைகின்றது

அன்னத்தின் இரு
விழியும் அன்பாக
வெள்ளத்தின் தத்தளிக்கும்
கன்றாக
உள்ளத்தின் சுமையெல்லாம்
ஒன்றாக
உயிரோடு எனை வறுத்தி
கொன்றாக

வான் பார்த்த
வெளி களத்தில்
ஊர் பார்க்க
என் பெண்மையை
சேர் பட்ட மலராக
சேர்ந்து பலர் கெடுத்தார்கள்

உடல் வெந்த என்
கணவன் - துடி துடித்த
கை குழந்தை
மலர் எரிந்த
பெரும் கொடுமை
பலர் குடித்த
என் பெண்மை

ஈனத்தின் இழிவாக
வாழ்கின்றேன்
ஈழத்தில் பிறந்ததால்
வீழ்கின்றேன்

ஒரு சீதை உயிர் காக்க
ஊர் கூட்டி வந்த ராமா - இங்கே
ஓராயிரம் சீதைகளை சீரழித்தார்
எங்கே போனாய் ?

மான் மயில்கள் மா எருது
தேன் மலர்கள் பல வாழ
மீன் வாழ கூட நதி உண்டு
நான் வாழ வழி இல்லை

ஈழத்தில் நான் பிறந்தேன்
வேறென்ன பிழை செய்தேன் ?

மழை வெய்யில்
என்றென்றும் மேனியிலே
உடை அணிந்த
மிருகமாய் வேலியிலே
இன்பத்தை இது வரை
நான் காணவில்லை
எனை அழைக்க
காலனுக்கு ஏன் தோணவில்லை

எங்களுக்கு
மரணம் விடுதலை
பிழைத்தோம் பெரும்
பிழை ..

No comments:

Post a Comment