January 10, 2014

மொழி காப்போம்



இனிதான மொழிக்காப்போம் !!
இறக்கும்வரை தமிழ் காப்போம் .............


பொதிகை மலை தலை கலைத்து 
புறப்படும் தென்றல் - அருகே 
அடிவார வயல் வெளியில் 
வாசத்தை தெளிக்கும் 

வயல் நடுவே வரப்பினிலே
வரிசையில் பெண்கள்
கயல் தமிழில் கானம் பாட
காற்றினில் கமழும்

தேன்கலந்த கனிக்கூட
தமிழிடம் தோற்க்கும் - அந்த
தேவ பாஷை சமஸ்கிரதம்
தேகமும் வேர்க்கும்

ஊன் கலந்த உயிரெல்லாம்
தமிழ் மொழியாக்கும் - இந்த
உடல் விட்டு போகும் வரை
தமிழ் மொழி காக்கும்

கரை நின்றும் கால் தேடி
கடல் நீர் நினைக்கும்
சிறை பட்டினும் குயிலிசை
காதினில் மணக்கும்

இடர்ப்பட்ட நெஞ்சம்
இன்னல்கள் காணும்
சுடர் விட்டு ஒளி வந்தால் - இருள்
சூனியம் ஆகும்

அறியாதவனை அப்பன் என்று
சொல்வது மடமை - பிள்ளைக்கு
புரியாத பெயர் வைப்பது
அதனினும் கொடுமை

தள்ளாத வயதினிலே
வறுமை கொடுமை - தாய்
தமிழ் மொழியை மறப்பது
அதனினும் இழிமை


விழியிழந்து போனவன்
ஒளியை இழந்தான் - அன்னை
மொழி மறந்து போனவன்
மானத்தை இழந்தான்

அன்னம்தான் எல்லோர்க்கும்
அளந்திட வேண்டும் - பாரில்
பசியின்றி வாழும் - நல்
நிலை வர வேண்டும்

எண்ணம்தான் மேன்மையில்
சிறந்திட வேண்டும் - இனி
எப்பிறவியும் தமிழனாய்
பிறந்திட வேண்டும்

மொழிமறந்து வாழ்வதினில்
யோக்கியமென்ன - தமிழ்
மொழிகாக்க இறப்பவதை விட
பாக்கியமென்ன ...

உணவிட்டு உயிர் காப்போம்
உயிர் கொடுத்தினும் மொழி காப்போம்

- வை நடராஜன்

No comments:

Post a Comment