January 4, 2014

கண்ணன்



பாற்கடல் திருமாலும்
பார் பார்க்க முடிவெடுத்தான்
ஆயர் குல இடையவனாய்
அவனியிலே உருவெடுத்தான்

வாசுதேவன் குடியிலே
வழியெல்லாம் மழை நினைந்தான்
சேஷன் அவன் குடை பிடிக்க
சேமமாய் இடம்பெயர்ந்தான்

கம்சனவன் இடர் எல்லாம்
கண்ணனவன் விசை உடைத்தான்
கை குழல் தினமெடுத்து
கானத்தில் இசை படைத்தான்

வண்டுகள் பூக்களையும்
மறந்துதான் வந்தன
கறவைகளும் புல் மறந்து
கானத்தில் உறைந்தன

செண்டுகள் மலர்ந்துதான்
செல்லும்வழி படர்ந்தன - கண்ணன்
கண்டு கன்னியர் எல்லாம்
காதலில் உள்கலந்தனர்

கோபாலன் குழல் எடுத்தான்
கோபியரின் மனம் கெடுத்தான்
பூபாளம் தான் இசைத்தான்
புல் பனியா உயிர் குடித்தான்

பார்த்திபன் வில் தளர்ந்து
பாசத்தில் கண் கசிந்தான்
பார்த்தனவன் படைநடுவே
கீதை எனும் இசை மொழிந்தான்

ராதையவள் மயங்கிடவே
ராகத்தில் குழல் எடுத்தான்
கீதை எனும் பாடத்தில்
கீர்த்திக்கு நிழல் கொடுத்தான்

மதுராவில் உயிர் எடுத்தான்
மதயானை உயிர் குடித்தான்
விதுராவின் குடில் புசித்தான்
விளையாட்டாய் தினம் ரசித்தான்

கண்ணனவன் கள்வனென
கள்ளன் அவன் பெயரெடுத்தான்
மன்னனாக அரச்சுனனுக்கு
மாதவனே தேரெடுத்தான்

காம்புதனில் விடம் அறிந்து
கள்ளியவள் உயிர் குடித்தான்
பாம்பு தலை பாதம் பட்டு
மலை பிளந்து குடை பிடித்தான்

சுடர் ஒளியே சுவை பாகே
சுனை நீராய் புத்துடுவாய்
இடர் இங்கு இனிவேண்ட
இடையவனே ஏற்றுடுவாய்

கண்ணனே காவியம்
களிநெஞ்சின் ஓவியம்
கண்ட வாழ்வு கரையும்வரை
கண்ணன்தான் யாவையும்

கண்ணனே ஊன்று கோள்
கனிவுடன் எனை ஏற்றுக்கொள்
மன்னவன் மாதவனை
மனதார போற்றிக்கொள்

- வை . நடராஜன்

1 comment:

  1. ஆகா...! ரசித்தேன் கண்ணனை...!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete