September 26, 2012

திலீபன்




தமிழ் ஈழம் ஒளிர்வேண்டி
தன் உயிரை விளக்காக்கி
தன்மானம் வாழ்விற்கு
தன் உயிரை பொருளாக்கி

பலர் அறியா விடை பெற்ற
பைந்தமிழ் தியாகி இவர்
பசி துறந்து தன் வாழ்வை
பணயம் வைத்த யோகி இவர்

உண்ணாமல் நோம்பிருந்து
உயிர் துறந்த உத்தமரை
எண்ணாமல் நாமிருந்தால்
எதற்காக நாம் பிறந்தோம் ?

ஆயுதங்களை எடுக்காத
ஆற்றல் மிகு தீரனாய்
அடுத்தவர்களை வருத்தாத
போரிட்ட வீரனாய்

தனி ஈழம் கனவுக்கு
தன் உடலை உணவளித்தார்
தமிழ் இனத்தின் வளர்சிக்கு
தன் உயிரை கடனளித்தார்

அவர் கொடுத்த உயிர் கடனை
என்று நாம் அடைப்போமோ
அவர் கண்ட தமிழ் ஈழம்
என்று நாம் படைப்போமோ ?

புலிகளில் பிறந்தாலும்
புத்தராய் வாழ்ந்தவர்
வலிகளை ஏற்று
வரலாற்றில் விழ்ந்தவர்

ஒரு தாயின் கருவறையில்
உருவான புலி இவரோ
தமிழ் தாயின் திருமடியில்
தலை சாய்ந்து உயிர் துறந்தார்

பலர் நடித்த உண்ணாவிரதம்
பழ சாறில் முடிந்தது
இவர் கொண்ட தீரம் மட்டும்
தியாகத்திலே முடிந்தது

No comments:

Post a Comment