வாடி புள்ள வாழலாம் :
வானத்துல சாமி இருக்கு
வாழ்க்கையில அன்பு இருக்கு
ஊனம் என்று எதுவுமில்லை
உழைக்க நல்ல தெம்பு இருக்கு
சாதி சனம் எதுவுமில்லை
சாமி கூட இல்ல புள்ள
கம்பு காடும் காராம் பசுவும்
நம்பும் நமக்கு சாமி புள்ள
சோசியம் சாதகம் எல்லாம்
சோம்பேறி சொன்ன வேதம் புள்ள
சோடி கிளி நீ கூட இருந்தா
எமகண்டம் ராகுகாலம் ஒண்ணுமில்ல
கஞ்சி ஒ கூழோ எதுவோ பெண்ணே
மனசு நிறைய வாழலாம்
நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி
குழந்தை போல வாழலாம்
வஞ்சி கொடி வாடி புள்ள
வச்சி இருக்கன் நெஞ்சிக்குள்ள
ரெண்டு பெரும் சேந்து கொஞ்சி
பெத்துகுவோம் பத்து புள்ள
கூர வீட்ல இருந்தாலும்
குணத்துல நானும் அரசனடி
அழகோ பணமோ தேவ இல்ல - உன்
ஆயுசுக்கும் நான்தான் புருசனடி
தங்கம் வையரம் தேவையில்லை
ஒரு தென்னங்கன்னு போதுமடி
புள்ள போல வளப்போம் - நாம்ப
போனாலும் ஊருக்கு உதவுமடி
நூறு ரூபா சீல தாண்டி
வாங்கி தர வசதி இருக்கு - ஆனா
நூறு வருசம் போனா கூட
உன்ன சுமக்க நெஞ்சிருக்கு
வேப்ப மர காத்திருக்கு
வெள்ளி நிலா விளக்கிருக்கு
தோப்பு குயில் கூடுயிருக்கு
தொணைக்கு ரெண்டு ஆடுருக்கு
கட்டிலிலே வேர்வை சிந்தி
வயசு பசியை போக்குவோம்
கழனியிலே வேர்வ சிந்தி
வயத்து பசிக்கு ஆக்குவோம்
மாடி ஊடு இல்லையடி
மனசில் கள்ளம் இல்லையடி
ஓடி ஆடி ஒழச்சி உன்ன
உசிர பாத்துக முடியுமடி
தரிசு நிலம் காடு இருக்கு
குடிசை வீடு மாடு இருக்கு
வெரசா வாடி வாழ்க்கையில
பெருசா வாழ்ந்து காட்டுவோம்
No comments:
Post a Comment