January 4, 2014

கடவுள் உருவம் என்ன ?





பக்தியில் திளைக்கும் வரை
பற்பல உருவில் இருப்பார்
பசித்தவன் கண்ணுக்கு
உணவின் உருவில் இருப்பார்

படிப்பவன் மனதிலே
நூலின் உருவில் இருப்பார்
பார்வையே இல்லாதவர்க்கு
எந்த உருவில் இருப்பார் ?

காமத்தின் ஆட்சி வந்தால்
காதலின் உருவில் இருப்பார்
கடன் பட்ட கைகளுக்கு
காசின் உருவில் இருப்பார்

உடல் கெட்டு போனவர்களுக்கு
மருத்துவர் உருவில் இருப்பார்
மனம் கெட்ட பித்தர்களுக்கு
எந்த உருவில் இருப்பார் ?

கடும் வெயில் நேரத்திலே
காலனி உருவில் இருப்பார்
கருகிய பயிருக்கு
வான் மழை உருவில் இருப்பார்

இருட்டிலே இருக்கையிலே
ஒளியின் வடிவில் இருப்பார்
இறந்து நாம் செல்கையிலே
எந்த வடிவில் இருப்பார் ?

தடிக்கி நாம் விழுகையிலே
தாங்கும் கையில் இருப்பார்
தண்ணீரில் முழுகும் போது
காற்றின் உருவில் இருப்பார்


மெய் உணர்ந்த ஞானிகளுக்கு
அன்பின் உருவில் இருப்பார்
கை குழந்தை கண்களுக்கு
எந்த உருவில் இருப்பார் ?

- வை . நடராஜன்

No comments:

Post a Comment